CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, January 13, 2009

பிச்சை எடுப்பதை தொழிலாக அங்கீகரித்துவிட்டால் என்ன?

பணத்துக்காக செய்யப்படும் பாலியலை (விபச்சாரத்தை) ஒரு தொழிலாக அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும் என்று பல்ர் குரலெழுப்புகிறார்கள் (முன்னர், `விலைமாதர்கள்' எனப்பட்ட வார்த்தைப் பிரயோகம் தற்போது `பாலியல் தொழிலாளர்கள்' _ Commercial Sex Workers _ என்று கிட்டத்தட்ட முற்றிலுமாகவே மாற்றப்பட்டும் விட்டது ).

விபச்சாரத்தைத் தொழிலாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோருகிறவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதாகவோ அல்லது சீர்திருத்துவதாகவோ எண்ணிக்கொண்டு உண்மையில் அவர்களது வாழ்க்கையை எதிர்திசையில் இழுக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் தன் வீட்டுப் பெண்ணாக இருந்தால் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை வைப்பார்களா?

விபச்சாரம் ஒரு தொழிலாகவே செய்யப்படுகிறது என்பதே முதலில் வேதனைக்குரிய விஷயம், சமூக சீர்கேட்டின் அடையாளம். அதை சட்டப்படியாகவே ஒரு தொழிலாக அங்கீகரித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை விபச்சாரத்தில் (வாழ வழியின்றியோ அல்லது ஏமாற்றப்பட்டோ அல்லது பெருமளவில் பணம் சம்பாதிக்க எண்ணியோ எதுவாக இருந்தாலும்) ஈடுபடும் பெண்களை மேலும் இழிவுபடுத்துவதாகவே அமைகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்தான் மற்ற எல்லோரை விடவும் அதிகமாக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பேசும் `அறிவு ஜீவிகளும்' இருக்கத்தான் செய்கிறார்கள். விபச்சாரம் செய்து எளிதில் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்று எண்ணி வந்தாலும் அது ஒரு சமூகத்துக்கு கௌரவமா? என்று அந்த `மேதாவிகள்' சிந்திப்பதில்லை.

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே கூடத் தங்களைப் பாலியல் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறார்களே என்றும் பல `புத்திமான்கள்' கேட்கிறார்கள். `உள்ள நிலையும் பறிபோய்விடப் போகிறதே' என்ற அச்சத்தில் அப்பெண்கள் எழுப்பும் கூக்குரலை வைத்துத் தங்கள் நிலையை அவர்கள் நியாயப்படுத்திக் கொள்வதாகக் கூற முடியுமா?

ஒரு வாதத்துக்கே, விபச்சாரத்தைத் தொழிலாக அங்கீகரிப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், குழந்தைத் தொழிலாளர் முறை, பிச்சை எடுப்பது போன்றவற்றை என்ன செய்வது? அவற்றையும் தொழில்களாக அங்கீகரித்துவிடலாமா?