CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 9, 2008

எது மதசார்பின்மை?

தீவிரவாதம் பெருகிவரும் இக்காலகட்டத்தில் மதசார்பின்மை பற்றிய கருத்துக்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது.

`எந்த மதத்தையும் சாராதிருத்தல்' என்பதுதான் மதசார்பின்மை என்ற வார்த்தைக்கு இயல்பாகவே உள்ள பொருளாகும். ஆனால் அனைத்து மதங்களையும் சமமாகப் பார்பதுதான் மதசார்பின்மை என்று பெரும்பாலான நேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. மதசார்பின்மை பற்றிய இந்தத் தவறான விளக்கத்தை மதவாத சக்திகள் வேண்டுமென்றே பரப்பவும் செய்கிறார்கள்.

தனிமனிதர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம், விருப்பப்படும்போது மதம் மாறலாம் அல்லது எந்த மதத்தையும் சாராதவர்களாகவும் இருக்கலாம்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு மதங்கள் இருக்கமுடியாது. அது எந்த மதத்தையும் ஆதரிக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. மதம் என்பது தனிமனிதர்கள் சம்மந்தப்பட்ட விஷயம். அவர்களின் மத சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடவும் முடியாது. மத நம்பிக்கையை வூக்குவிக்கவும் முடியாது.

ஹஜ் பயணம் போகிற முஸ்லிம்களுக்கு பணம் தருவதோ, இந்து சமயத்துக்கென்று ஒரு அறநிலையததுறையை நிர்வாகம் செய்வதோ, மதமாற்றத்தைத் தடை செய்வதோ ஒரு அரசாங்கத்தின் வேலையில்லை.

`எம்மதமும் சம்மதம்' என்ற பார்வை தனிமனிதர்களிடையே மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தலாம். ஆனால் பல்வேறு மதங்களை சார்ந்த மக்களை ஆட்சி செய்யும் ஒரு அரசாங்கம் `எம்மதமும் சம்மதம்' என்ற கண்ணோட்டத்தில் செயல்படுமேயானால் அங்கே பெரும்பான்மையான மதம் எதுவோ அதைச்சார்ந்த மதவாத சக்திகளே அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது ஒட்டு வங்கிக்காக அரசாங்கமே பெரும்பான்மை மதத்திடம் சமரசம் செய்து கொள்ளும். அவ்வாறான போக்குகள் இயல்பாகவே சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகவே இருக்கும்.

`Secular State' என்று பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவிலும் இதுதான் நடக்கிறது, பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் இதுதான் நடக்கிறது. அந்த வேதனைதான் இந்த விளக்கத்தையே எழுதவைக்கிறது.

இப்படி எழுதுவதைக்கண்டு இந்து தீவிரவாதிகளும், முஸ்லீம் தீவிரவாதிகளும், கிறித்துவத் தீவிரவாதிகளும் ஆத்திரம் கொள்ளலாம். அதுசரி, அவர்கள் ஆத்திரம் ொள்ளாவிட்டால்தான் ஆச்சரியம் !

0 comments: